Sunday, July 22, 2007

தீக்ஷிதர் சரித்திரம்.

கி.பி. 1774 ஆம் ஆண்டு. கலக மானுடப் பூச்சிகள் சரளமாய் உற்பத்தியாகி கொன்டிருந்த காலமது. பாரத மாதா திரெளபதியாகியிருந்தாள்.இவளைக் காக்க ஒரு கண்ணனுமில்லை. துயிலுரிக்க மட்டும் பல ஐரோப்பிய துச்சாதனர்கள். கொஞ்சம் கொஞ்சமாய் சாத்திரங்கள் பிணம் தின்ன பழகி கொண்டிருந்தன. அமெரிக்காவில் வாஷிங்டனுக்கு எடுத்த சுதந்திர தாகம் இந்தியாவில் எடுத்திருக்கவில்லை.

இராமஸ்வாமி தீக்ஷிதருக்கு கவலை பெருகியது. தனக்கு நாற்பது வயதாகியும் ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை. நீர் மேகமாவதற்கு சில வினாடிகளேயாகும்.நீர் தென்னை இளநீராக சில நாட்களாகும். ஆனால் அதே நீர் ஆழ்கடலில் முத்தாக பல ஆண்டுகளாவது இயற்கை தானே??? தனக்கு பிறக்கவிறுப்பது மேகமோ இளநீரோ அல்ல. முத்து என்பது அப்பொழுது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தன் மனைவியுடன் ் வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஒரு மண்டலம் விரதமிருக்கத் தொடங்கினார். அங்கு முத்துக்குமார ஸ்வாமியின் சந்நதியில் பஜனமிருந்தார். பக்திக்கு செவி சாய்த்து காமிதார்த்தத்தை தருவது இறைவனின் அழகு. ஆனால் தீக்ஷிதர்வாளின் காமிதார்த்தமும் இறைவனும் அபின்னம். அவர் கேட்டது அந்த முத்துக்குமரனைத்தான். குமரனுக்கோ இல்லையென்று சொல்லும் பழக்கமில்லையே. உடனே செவி சாய்த்தான். சுப்புலக்ஷ்மியம்மாள் கனவில் தோண்றி தேங்காய், பழம், மஞ்சள் முதலியவற்றை அவள் கர்ப்பத்தில் கட்டினான். அதே இரவு இராமஸ்வாமியின் கனவிலும் தோன்றி முத்துமாலையொன்றினையளித்தான். என்ன தான் உற்றார் உறவினர் பலர் வந்து கொஞ்சி பரிசளித்தாலும் சேய் தாயை பிரியுமோ. திக்ஷிதரும் அவ்வாறே தன் தாய் கமலாம்பாளைப் பிரிய மனமின்றி திருவாரூர் திரும்பி விட்டார்.

சுப்புலக்ஷ்மியம்மாள் கர்ப்பம் தரித்தார். தீக்ஷிதர் மனதில் இன்பம் தரித்தார். அந்த முத்துகுமரன் சம்பவிக்க தன் உடலினையிழந்தான் கந்தர்ப்பன். ஆகையால் இம்முறை தான் சம்பவிக்கும் பொழுது உலகமே அவன் பெயரை சொல்ல வேண்டுமென்று எண்ணினானோ என்னவோ, முத்துகுமரன் பிறக்க தேர்ந்தெடுத்த தமிழ் வருடம் மன்மத வருடம். மன்மத வருடம், பங்குணி மாதம், கார்த்திகை நக்ஷத்திரத்தில் திருவாரூரில் த்யாகராஜ ப்ரம்மோத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. அந்த சுபயோக சுபதினத்தில் சுப்புலக்ஷ்மியம்மாள் ஓர் ஆண் மகனையீன்றெடுத்தாள்். தனக்கு பிறந்திருப்பது முத்துக் குமரனுடைய அம்சம் என அறிந்த இராமஸ்வாமி தனது குமரனுக்கு முத்துஸ்வாமியென பெயரிட்டார்.

வளர்வான்...



வளர்வான்...

1 comment:

V Govindan said...

I saw your posting in Rasikas. There are at least two typing errors. A good effort. Keep it up
மணைவி ஈண்றெடுத்தாள்